உலகத்தமிழர் ஒன்றிணையவும், மொழியை காக்கும் பொருட்டும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், இரண்டாவது மாநாடு பேரறிஞர் அண்ணாவால், 1968 ஆம் ஆண்டு சென்னையிலும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1970 ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடும், 1974 ஆம் ஆண்டு நான்காவது மாநாடு இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில், அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆரால், 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4 தொடங்கி 10 ஆம் நாள் வரை நடத்தப்பட்டது. இதனையொட்டி 7 நாட்களும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழ் சான்றோர், அறிஞர் பெருமக்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பெரு நிகழ்வாக அது அமைந்தது.
அச்சமயத்தில், மாநாட்டு நினைவாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக, இன்றைய காளவாசல் சந்திப்பில் திரு.வி.க., ஃபாத்திமா கல்லூரி சந்திப்பில் வீரமாமுனிவர், இராபர்ட் டி நொபிலி, கே.கே.நகர் சந்திப்பில் தொல்காப்பியர், ராஜா முத்தையா மன்றம் சந்திப்பில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தல்லாக்குளம் பெருமாள் கோவில் திடலில் தமிழ்த்தாத்தா உ.வே.சா., கவிமணி தேசிக விநாயகம், அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் திருவள்ளுவர், மேலமடை சந்திப்பில் தனிநாயகம் அடிகள், தெப்பக்குளம் சந்திப்பில் ஆறுமுக நாவலர், பழங்காநத்தம் சந்திப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன.
மேலும், மதுரை மாநகரின் திசைக்கொன்றாக நான்கு தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு, மேற்கே விராட்டிபத்தில் அங்கயற்கண்ணி தோரண வாயிலும், வடக்கே மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயிலும், கிழக்கே ஐராவதநல்லூரில் சோழன் தோரண வாயிலும், தெற்கே பசுமலையில் சேரன் தோரண வாயிலும் எழுப்பப்பட்டன. மதுரை தமுக்கத்தில் அமைக்கப்பட்ட வளைவுக்கு மூவேந்தர் நுழைவாயில் எனப் பெயரிட்டு, அதனை எம்ஜிஆரே திறந்து வைத்தார். தமுக்கம் வாயிலில் அமைக்கப்பட்ட கருங்கல்லாலான தேரில் தமிழன்னை சிலை நிறுவப்பட்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் திறக்கப்பட்டது.
மதுரையின் நாற்பதாண்டு நினைவுகளை சுமந்து நிற்கும் இவைகளைப்பற்றி, அம்மாநாட்டில் கலந்து கொண்ட 93 வயது நிரம்பிய தமிழறிஞர் இளங்குமரனார், நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ”மாநாட்டில் சங்கச் சான்றோர் சால்புகள் என்ற தலைப்பில் என்னோடு சேர்த்து 13 பேர் பேசினோம். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய நாவலர் நெடுஞ்செழியன், தனது தலைமை உரைக்குப் பிறகு, பேச வருவோர் தலா 3 நிமிடங்கள் மட்டுமே பேசக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், அப்படிச்சொன்ன நாவலரோ முக்கால் மணி நேரம் பேசியிருந்தார்.