மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மான்கள் அடிக்கடி இறை தேடி நான்கு வழிச்சாலையை கடந்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று(டிச.12) பிற்பகல் 3 மணியளவில் இறை தேடி நான்கு வயது பெண் புள்ளிமான் ஒன்று சாலை அருகே நின்று கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியை சுற்றி திரிந்த நாய்கள் துரத்த இதில் மிரண்டுபோன பெண் புள்ளிமான் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிவரக்கோட்டை நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்து, பெண் புள்ளி மான் மீது மோதியதில் மான் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மான் இறந்ததைக் கண்ட கிராமத்தினர் உசிலம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு உடற்கூராய்வு செய்து அப்பகுதியில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து இப்பகுதியில் இரை தேடிச் செல்லும்போது மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் வனச் சரணாலயம் அமைத்து மான்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி - ரஜினி அறிக்கை!