மதுரை:தமிழ் தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன், அதன் பல்வேறு தொழில்நுட்பங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவின் பிறந்த தினம் இன்று. கணினி யுகமாக காலச்சூழல் இன்று மாறினாலும், தட்டச்சுக் கல்வியே இதற்கு அடிப்படை என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அது குறித்த ஒரு பார்வைக்கவிஞர் தாராபாரதியின் 'வெறுங்கை என்பது மூடத்தனம்... உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற வரிகளுக்கு முழு முதல் பொருத்தமானது, தட்டச்சுக் கல்வியே. விரைவான எழுத்து முறையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தட்டச்சு இயந்திரம் கடந்த 1867ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் எல் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கும் முன்பு பல்வேறு நபர்கள் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்க முயன்றாலும், முழுமையான வடிவத்தைக் கண்டறிந்தவர், கிறிஸ்டோபரே. உலகின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆங்கிலேயர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களின் எழுத்துப்பணிகளுக்கு தட்டச்சுப் பொறிகளே பெரும் பங்காற்றின.
இந்நிலையில், தமிழ்மொழிக்கென்று தட்டச்சு பொறியை உருவாக்கும் சிந்தனை, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் கடந்த 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் பிறந்த ஆர்.முத்தையாவுக்கும் உதித்தது.
கணினி தவிர்க்க இயலாத ஒன்று
தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் தட்டச்சு இயந்திரத்தில் உள்ள நான்கு வரிசைகளில், 46 விசைகளுக்குள் கொண்டுவருவதைச் சவாலாக ஏற்று, புதிய இயந்திரத்தை உருவாக்கினார். நகர்கின்ற விசைகளோடு, கொம்பு எழுத்துக்கள், சுழி எழுத்துக்கள் ஆகியவற்றிற்காக 'நகரா விசை' தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, சாதனை படைத்தார்.