மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சியின் சார்பாக 'மண் மணக்கும் தூய்மை மதுரை' என்கிற தலைப்பில் இயற்கை சார்ந்த கண்காட்சி இன்று தொடங்கி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு திடக்கழிவு மேலாண்மை இயற்கை உரங்கள், இயற்கை சார்ந்த அரங்கங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காட்சி அரங்கில் மரபு சார்ந்த பொருட்கள் குறிப்பாக ஆட்டு உரல், திருகை, ஏர் கலப்பை, மருந்து உரல், லாந்தர் விளக்கு, சிம்னி விளக்கு, மட்ட பலகை என பல்வேறு மரபு சார்ந்த பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய 'மண்மணக்கும் தூய்மை மதுரை' கண்காட்சி இதுமட்டுமல்லாது கிராமம் சார்ந்த வாழ்வியலை மையப்படுத்தும் விதமாக திரையுடன் கூடிய மாதிரி வீடு அதில் வயதான பெண்மணி ஒருவர் அரிசி புடைத்தல் போன்ற காட்சி பதிவுகளும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களை பெரிதும் ஈர்த்துள்ளது
இதனை மதுரை மாநகராட்சியின் எட்டு பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 300 மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர். மேலும் கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் வருகின்ற பார்வையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
இக்கண்காட்சியை காண மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் வருமாறு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.