தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் களியாவூர் பஞ்சாயத்து உழக்குடி கிராமத்தில், கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல பழங்காலப் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதியில் நெடுங்கற்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நெடுங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, உழக்குடி கிராமத்தில் காணப்படும் நெடுங்கற்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
மேலும், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், உழக்குடி கிராமத்தையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அகழாய்வு மேற்கொள்ள கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, உழக்குடி கிராமத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அகழாய்வை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.