மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் (Bio - Technology) படிப்பிற்கான 2022-23ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 சீட்டுகள் மட்டுமே உள்ள இந்தப் படிப்பிற்கு 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தின் 16ஆவது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தில் EWS: மேலும் விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான (Economically Weaker Section) 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக உரிய வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற இட ஒதுக்கீட்டு பிரிவு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கல்வியாளர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இல்லாத EWS: இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டு முதுகலைப் படிப்பிற்கான விண்ணப்ப படிவங்களில் பொருளாதாரத்தின் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டிருந்தது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறை தமிழ்நாட்டில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.
நீக்கப்பட்ட EWS பிரிவு: மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் இந்த இட ஒதுக்கீடு முறை ஏன் அமல்படுத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, பிறகு அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பத்திலிருந்து அக்குறிப்பிட்ட பிரிவு நீக்கப்பட்டது. அண்ணா பல்கலை.,யின் இந்த நிலைப்பாட்டை அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் எதிர்த்து பேட்டியும் அளித்தார்.
இதையும் படிங்க:மதுரை காமராசர் பல்கலைக்கழகமா..? அல்லது கார்ப்பரேட் நிறுவனமா..? - பல்கலைக்கழக பாதுகாப்பு குழு கேள்வி
புதிய கல்விக் கொள்கையின் நீட்சியா?...: இந்த சூழலில், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பிரிவைக் குறிப்பிட்டு ஆன்லைன் விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அண்மையில் ஆளுநர் நடத்திய துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுகுறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர் தலையிட வேண்டும்: அதன் தொடர்ச்சியாகவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி இருக்கிறார்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலையிட்டு அதனை வாபஸ் பெற வேண்டும்" என்றார்.