மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, திருமலை நாயக்கர் அரண்மனை. இந்தோ - சரசானிக் கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை கி.பி. 1636ஆம் ஆண்டு திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாகும். மிகப்பெரிய மாடங்களையும், நூற்றுக்கணக்கான பிரமாண்ட தூண்களையும் கொண்டு எழிலுடன் திகழ்கிறது. நான்கில் ஒரு பாகமாக எஞ்சியுள்ள, தற்போதுள்ள அரண்மனையில்தான் திருமலை மன்னர் ராஜ பரிபாலனம் நடத்தியதாகத் தகவல். இதன் உட்புறம் மிகப் பிரமாண்டமான நாடக சாலை உள்ளது. இங்கு தான் மன்னரும் அவரது குடும்பத்தாரும் மந்திரிகளும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்துள்ளனர்.
மதுரை மாநகரில் மிக உயரமானதாகவும் அழகிய மாடங்களை கொண்டதாகவும் திகழ்கின்ற இந்த அரண்மனையில் பல்லாயிரக்கணக்கான புறாக்களும் வெளவால்களும் தங்களின் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்துவருகின்றன. அவற்றின் எச்சம்காரணமாக அரண்மனையின் பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர் என தமிழ்நாடு தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து ரூ. மூன்று கோடியே 60 லட்சம் செலவில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதில் ஒன்றாக புறாக்கள், வெளவால்களின் வருகையை தடுப்பதற்கு அரண்மனையின் நடுமுற்றத்தில் நைலான் வலை அமைத்து உள்ளதுடன், மாடங்களில் உள்ள துவாரங்களில் இரும்பு வலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் இந்தச் செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாணல் நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், 'சுற்றுச்சூழலுக்கு பறவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும், தமிழ்நாடு அரசுக்கு ஏன் தெரியாமல் போனது. மும்பையில் உள்ள 'கேட் வே ஆஃப் இந்தியா' பகுதியில் ஆயிரக்கணக்கான புறாக்களை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அந்த மாநில அரசாங்கம் அப்பறவைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அதனைப் பாதுகாத்து வருகிறது. அதேபோன்று தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சார்மினார் அருகே நான்கு வழிச்சாலை ஒன்றை இரு வழிச்சாலையாக சுருக்கி மற்றொரு பகுதியை புறாக்களின் வாழ்விடப் பகுதியாக அந்த மாநில அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. அதுபோன்று திருமலை நாயக்கர் மஹாலில் வசித்து வரும் அந்தப் பறவைகளை தொந்தரவு செய்யாதவாறு ஏன் பாதுகாக்க முடியாது' எனக் கேள்வி எழுப்புகிறார்.
மதுரையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மரங்கள் அற்ற ஒரு நகரமாக மாறி விடுமோ என்ற அச்சத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்கிறார், மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த குபேந்திரன்.