மதுரைமாநகர் தல்லாகுளம் பகுதியில் 22 வயது உடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு உரிய ஆவணங்களின்றி வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதாக மதுரை மாவட்ட வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்புகார்களின் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிர்க் காப்பாளர் உத்தரவின்பேரில், யானையைப் பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மே 26) இரவு அதிரடியாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள், கால்நடைத்துறை மருத்துவர்கள், காவல்துறையினர் குழுவாக சேர்ந்து யானையைப் பறிமுதல் செய்ய முயன்றபோது யானையின் உரிமையாளர் யானையை பறிமுதல் செய்யவிடாமல் வனத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே யானையின் பாதுகாவலர் திடீரென தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து யானையை லாரியில் ஏற்றுவதற்கு, பாகன் இல்லாமல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வந்தனர்.