பிறப்பைப்போல் இறப்பும் இயற்கையின் வழிகாட்டுதலில் நிகழ்வதுதான் சரி. ஆனால், யாரோ ஒருவர் உங்கள் இறப்பை தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால், சாலை விபத்து மரணங்கள் அப்படித்தான் நிகழ்கின்றன. அதுவும் மது போதையில் வாகனம் ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி உயிர் பறிக்கும் கொடுமையை எப்படி சகிப்பது?
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் வழங்கிய, சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன், “ மாநிலம் முழுவதும் தற்போது 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், ஏறக்குறைய 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிகாரர்களாக இருக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. உழைக்கும் மக்கள் தங்களது வருமானத்தில் 40 விழுக்காட்டிற்கும் மேல் குடிக்காக செலவு செய்கின்றனர்.
குடிக்கு அடிமையான ஒருவருக்கு ஆல்கஹால் தலைக்கேறி பார்வை கோளாறை உருவாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள்தான், நிதானமும் பொறுமையும் இல்லாமல் வாகனங்களை ஓட்டி மிகப்பெரிய விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சாலை விபத்து மரணங்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகிய இரண்டும் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு குடிப்பழக்கமே அடிப்படை காரணம்.
அதிமுக கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, படிப்படியாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்போம் என்ற வாக்குறுதி எந்த அளவிற்கு பின்பற்றப்படுகிறது? தீபாவளி போன்ற பண்டிகை நாள் மது விற்பனைக்கு அரசே இலக்கு நிர்ணயிக்கிறது. குறிப்பிட்ட விழுக்காட்டினரை குடிநோயாளிகளாக அரசே மாற்றியிருப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?