மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக நிலையூர் கண்மாய் மற்றும் தென்கால் கண்மாய் அமைந்துள்ளது. இதில் நிலையூர் கண்மாய் கூத்தியார்குண்டு, கப்பலூர், ஹார்விபட்டி, நிலையூர், பெருங்குடி, சாமநத்தம் போன்ற கிராம விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது.
இந்த நிலையூர் கண்மாய் 22 அடி உயரமும், 375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாயின் சுற்றளவு 12 கிலோமீட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.
இந்நிலையில் மதுரை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது அதைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் மதுரை நிலையூர் கண்மாயில் ஆய்வு மேற்கொண்டனர்.