தமிழ்நாடு

tamil nadu

மதுரை அருகே நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

By

Published : Mar 22, 2022, 10:22 PM IST

மதுரை மாவட்டம், மருதங்குடியில் கி.பி. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

Discovery of Nayakar period tax inscription near Madurai
மதுரை அருகே நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறையின் ஆசிரியர்-மாணவர் குறுந்திட்ட ஆய்வாக, மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சியின்கீழ் நிறுவப்பட்ட சத்திரங்கள் பற்றி பேராசிரியர் சிந்து மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக துறைத் தலைவர் முனைவர் உமா மற்றும் ஆய்வாளர்கள், மதுரை மாவட்டம் மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நாயக்கர்கால கல்வெட்டு ஒன்று இருப்பதை அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோசமணி என்பவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கே உள்ள சோமி குளம் கண்மாய்க் கரையில் இருந்த கல்வெட்டு பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் உதவியோடு படிக்கப்பட்டது.

இதுகுறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ப. சிந்து கூறியதாவது, 'பாண்டிய நாட்டுப் பகுதியில் நாயக்கர் காலத்தின் சத்திரங்களை ஆய்வு செய்து கொண்டு வருகிறோம். இந்த ஆய்வில் மாணவர்கள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலினி, தேவி பிரியதர்ஷன் ஆகியோரோடு மருதங்குடி பகுதியில் கள ஆய்வு செய்தோம். பாண்டியர் காலத்தில் இப்பகுதி வீரநாராயண வளநாட்டுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இந்த கிராமத்தில் சோமி குளம் கண்மாய் அருகே நாயக்கர்கால கல்வெட்டு ஒன்றை நாங்கள் ஆய்வு செய்தோம். 4 அடி உயரமும் ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளைக் கொண்டதாகவும் இருந்தது. இந்த கல்வெட்டில் இந்த ஊரின் பெயரும் சோமி குளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் சோமிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடைபெறும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்து வறண்ட காலத்தில் புஞ்சை வரி என ஒரே நிலத்திற்கு இரு வகையான வரிகள் இப்பகுதியில் வசூலிக்கப்பட்டுள்ளதும் நாயக்க அரசுக்கு இப்பகுதி வரி வசூலிப்பவர் மூலம் வசூலித்து செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் இந்தக் கல்வெட்டின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வரியை வசூலிக்க காசடைய குடும்பத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு
மேலும் இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு, மாதம், நாள் குறித்த தகவல்கள் உள்ளன. இந்த கல்வெட்டின் எழுத்து அமைவினைப் பார்க்கும்போது நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது எனவும்; 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனவும் கருதலாம்’ என்றார்.

இதையும் படிங்க:காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details