தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை அருகே 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சிற்பங்கள் கண்டெடுப்பு - தமிழ்நாடு தொல்லியல் துறை

திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதியில் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன்கூடிய கல்வெட்டையும், ஆண் பெண் புடைப்புச் சிற்பத்தையும் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

By

Published : Sep 8, 2021, 2:23 PM IST

மதுரை:திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் இருக்கிறது கருவேலம்பட்டி. இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கிரந்த எழுத்துகளுடன்கூடிய கல்வெட்டு, புடைப்பு சிற்பங்களை வேளாண் நிலத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கருவேலம்பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் கொடுத்த தகவலின்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் போரசிரியர், பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் தலைமையில். பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு அந்த இடத்தில் ஆய்வுமேற்கொண்டது.

மதுரை அருகே 16 ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

தனியார் வேளாண் நிலத்தில் தனிப்பாறையில் கிரந்த எழுத்துகளுடன்கூடிய கல்வெட்டும் புடைப்புச் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தபோது, அது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இது குறித்து உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறும்போது, கருவேலம்பட்டியிலிருந்து மொச்சிக்குளம் செல்லும் சாலையில் உள்ள வேளாண் நிலம் ஒன்றில் உள்ள தனிப்பாறையில் 2 அடி அகலம், 4 அடி நீளத்தில் 4 வரிகளைக் கொண்ட கிரந்த எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.

அதனைப் படியெடுத்து ஆய்வு செய்தபோது, கோபாலகிருஷ்ணன் மகன் என்று தொடங்கி நான்காவது வரியில் தம்மம் என்ற சொல்லில் முடிவடைகிறது. இடையில் வெட்டப்பட்ட கல்வெட்டு காலப்போக்கில் மழை வெயில் போன்றவற்றால் தேய்ந்து சிதைந்துள்ளதால் தொடர்ந்து பொருளை அறிய முடியவில்லை.

கல்வெட்டின் இடதுபுறமுள்ள பாறையில், இரண்டு அடி அகலம், மூன்று அடி அகலம் கொண்ட புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காதுகள், கழுத்தில் அணிகலன்கள் அணிந்துகொண்டு ஆணின் சிற்பமும், நீண்ட காதுகள், கையில் வளையல் அணிந்து சற்று சாய்ந்த நிலையில் பெண்ணின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழ்ந்த தலைவன் தலைவிக்காக இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டை படியெடுத்தல்

அதிகமான தேய்மானம் காரணமாக சிற்பங்களின் முகங்கள் தெளிவற்று காணப்படுகின்றன. ஓய்வுபெற்ற தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சொ. சாந்தலிங்கம் உதவியுடன் சிற்பம், கல்வெட்டினை ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது.

அந்தச் சிலைகளை அங்குள்ள மக்கள் நீலன், நீலி எனத் தெய்வமாக வழிபட்டுவருகின்றனர் எனக் கூறினார்.

இதையும் படிங்க:கீழடி அகரத்தில் மீண்டும் உறைகிணறு கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details