சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை நடக்கிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய கட்டுப்பாடுகளுடன் விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், கோயிலுக்குள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வீதி உலாவை கோயிலுக்கு வெளியே உள்ள சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும். மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கள்ளழகர் ஒருநாள் மட்டும் வைகை ஆற்றில் இறங்கி செல்ல அனுமதி வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிதான் விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், நாள்தோறும் விழா முடிந்தவுடன் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் மட்டும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துகின்றனர்" என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும். சித்திரை வீதியில் சாமி உலா வர அனுமதிக்க வேண்டும், கோயில் வெளியில் சாமி சுற்றிவந்தால், பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வர். அதுதான் எங்கள் வேண்டுகோள் எனக் கூறினார்.