மதுரை:தேவர் ஜெயந்தி விழாவின் போது, அத்துமீறலில் ஈடுபட்டதாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 37 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக, மதுரை மாவட்ட காவல்துறை தகவல் அளித்துள்ளது.
அக்டோபர் 30 ஆம் தேதி, மதுரையில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் பேருந்தின் மீது ஏறி ரகளை செய்து, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தனர்.
இதுதொடர்பாக 30 இளைஞர்கள் மீதுசட்டவிரோதமாக கூடுதல் மற்றும் அரசு சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
மேலும், ட்ரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளின் மூலமாக அடையாளம் காணப்பட்ட 29 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
தேவர் ஜெயந்தி விழாவின் போது, மதுரை மாநகரின் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக, சுமார் 150 வாகனங்களைப் படம் பிடித்து, அந்த வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி இ-சலான் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஒட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பதிவான 79 வழக்குகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி - கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்