பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் முதுநிலைக் கல்வி பயில்வதற்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டப்படிப்புக்கும் வழங்கக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்தியா பிரியதர்ஷினி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் . அதில், "பணியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் போது அவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட 545 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே பட்டயப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இடங்கள் பட்டப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணியில் இருக்கக்கூடிய, அரசு மருத்துவர்கள் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற இயலாத நிலை உள்ளது. ஆகவே, பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டப்படிப்புகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.