மதுரை: MGNREGA: இந்திய நாட்டின் வறுமையை அகற்றும் வண்ணம் கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.
இதன்மூலம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலையை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்வதுடன், குறைந்தபட்ச கூலி உத்தரவாதத்தையும் இந்தத் திட்டம் வழங்கியிருந்தது.
அதன் அடிப்படையில் இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்தரவாதம் கிடைத்தது.
வேலையும் இல்லை; ஊதியமும் இல்லை
இந்நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அலங்கம்பட்டி கிராம பொதுமக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மிகக் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலங்கம்பட்டியைச் சேர்ந்த அடைக்கம்மாள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாள்கள் மட்டுமே எங்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த வருமானத்தைக் கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது. அலுவலர்களிடம், ஊராட்சித் தலைவரிடம் இதுகுறித்து பலமுறை முறையீடு செய்த பின்னரும் இந்த நிலையே நீடிக்கிறது.
அதேபோன்று ஒதுக்கீடு செய்த வேலை நாள்களிலும்கூட நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் கிடைக்கப்பெறவில்லை. இதுவரை ரூ.100-க்கும் குறைவாகவே நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி கூறுகையில், 'ஜூலை மாதம் எங்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்தார்கள் என்றால், மீண்டும் அடுத்த வேலை அடுத்த ஆண்டு ஜூலையில்தான் கிடைக்கிறது.
இதனைத் தவிர்த்துவிட்டு, வாரம் இத்தனை நாட்கள் என்று வேலையை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நூறு நாள் வேலைக்கு என நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை அலுவலர்கள் தருவதில்லை.
வெறும் நூறு ரூபாயைக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த ஊரில் மட்டும் சற்றே ஏறக்குறைய 800 பேருக்கு நூறு நாள் வேலைத்திட்ட அட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் அனைவருமே சராசரியாக 10இல் இருந்து 15 நாள்கள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த அட்டையிலும் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் உறுதிமொழியும், நிதர்சனமும்
மற்றொரு பெண் லட்சுமி கூறுகையில், "கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூலியாக ரூ. 300 வழங்கப்படும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலியே கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
அதேபோன்று நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிக்கும் பணியாளர்களை அவ்வப்போது மாற்ற வேண்டும், அவ்வாறு மாற்றுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே பணியாளரே இங்கு பொறுப்பிலிருந்து வருகிறார். அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது" என்கிறார்.
நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான உள்ளூர் பொறுப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு மாற்றம் செய்யப்படாத காரணத்தால், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி ஒதுக்கும் நிலை உள்ளதாக, அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர்.