தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிமன்றம் கேள்வி - Madurai Court News

மதுரை: பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

hc
hc

By

Published : Nov 9, 2020, 6:31 PM IST

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, உசிலம்பட்டி தாலுகா பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றதன. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு இல்லாமலும் அரசின் உரிய வழிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோன்ற மனுக்கள் தீபாவளி நேரத்தில் பணம் வசூலிக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் படுவதாகவும் கடந்த வருடம் இதே போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருதுநகர், மதுரை மாவட்டத்தில் எத்தனை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதில் எத்தனை லட்சம் நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நடைபெற்ற விபத்துகளில் எத்தனை நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? விபத்துகளை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பல்வேறு பகுதிகளில் தற்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details