மதுரை: அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்டப்பாதுகாப்பு கழக தலைவர் ஐ.மனோகரன் ஜெயகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் கல்வித்துறை அலுவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத பல்வேறு பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் ஏ.கருப்பசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ஸ்ரீதேவி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: நெல்லையில் அடிப்படை வசதியில்லாத ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி செயல்படும் கட்டடம் குடியிருப்புக்கான கட்டட வரைபட அனுமதி அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பொது கட்டடம் என சான்று வழங்கி பள்ளி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. தீயணைப்புத்துறை தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பு அந்த பள்ளியை அத்துறை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை.