மதுரை மாவட்டம், ஆனையூர் அருகே எஸ்விபி நகரைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் (71), ராதா (68) தம்பதியினர். இவர்களது மகன்கள் சரவணன் சக்திவேல் (46) துபாயிலும், ரத்தினகுமார் (43) சென்னையிலும், சுந்தர செந்தில் (40) நெதர்லாந்து நாட்டிலும் வசித்து வருகின்றனர். சக்திவேல் மதுரை கோரிப்பாளையத்தில் மிகப்புகழ்பெற்ற தனது தையல் கடையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதி இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி கரோனா தொற்றின் காரணமாக சக்திவேல் உயிரிழந்தார். ராதா குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவன் இறந்ததைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன் காரணமாக உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் கடந்த மே 28ஆம் தேதி ராதாவும் உயிரிழந்தார். கடந்த 47 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் இறந்த செய்தி ஆனையூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துபாயில் வசிக்கும் சரவணன் சக்திவேல் தொலைபேசி வாயிலாக பேசியபோது, "நாங்கள் எங்களோடு வரச்சொல்லி பலமுறை அழைப்புவிடுத்தும் கூட என் பெற்றோர் வர மறுத்து விட்டனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வது வழக்கம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மிகவும் அனுசரணையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களுடைய இறுதி முடிவும் அவ்வாறே அமைந்துவிட்டது. என் தாய், தந்தையரின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்றாலும்கூட ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இறப்பிலும் உடன் சென்றது எங்களுக்கு இப்போது வரை ஒருவித பெருமையாகத்தான் உள்ளது" என்றார்.
இரண்டாவது மகன் ரத்தினகுமார் சென்னையில் இருந்த காரணத்தால் உடனடியாக வந்து இறுதி காரியங்களை கவனித்துக் கொண்டார்.