சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில் இதனைத் தடுக்கவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய பங்காக விளங்கும் 95 விழுக்காடு காற்று மாசினை தடுக்கும் என்95 முகக் கவசம் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நுண் தன்மை கொண்ட பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை தடுக்கும் தன்மை கொண்ட இந்த என்95 வகை முகக் கவசம் பல்வேறு அடுக்குகளை கொண்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதுரையைச் சேர்ந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துவருகிறது. மதுரை நரிமேடு பகுதியிலுள்ள இந்த தனியார் நிறுவனத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முகக் கவசத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து சீனா செல்லும் என்95 முகக் கவசம் சாதாரணமாக பயன்படுத்தும் இரண்டடுக்கு முகக் கவசத்தை விட பாதுகாப்பான வகையிலும் மூன்றடுக்கு வடிகட்டி கொண்டதாகவும் பாதுகாக்கப்பட்ட மருத்துவத் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. முகக் கவசம் மட்டுமல்லாமல் அங்கி (கௌன்), காலணி உறை, தலை குல்லா உள்ளிட்டவைகள் அடங்கிய கிட்டாக வேண்டுமென கேட்பதால், அதனைத் தயாரிக்கும் பணிகளும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
கேரள மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு; தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை!
என்95 முக்கவசத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், மூலப்பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாலும், விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், மொத்த விலையில் முன்பு 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த என்95 முகக் கவசத்தின் விலை தற்பொழுது 10 ரூபாய் அதிகரித்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அந்நிறுவனத்தினர் கூறுகின்றனர்.