சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியும், இப்படியுமாக அனைத்து நாடுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கரோனா வதந்தி...
இச்சூழலில் கரோனா வைரஸ் பரவலைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திச் செய்திகள் இன்னும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. அதுபோன்றுதான் தமிழ்நாட்டில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கோரோசனம் மாத்திரை குறித்த சித்த வைத்தியத் தகவலும்.
மாற்றி சித்தரிக்கப்பட்ட புகைப்படம் கோரோசனம் மாத்திரையும்... வதந்தியும்...
கடந்த 1914-ஆம் ஆண்டு வெளியான 'கைமுறை பாக்கெட் வைத்தியம்' என்ற நூலின் குறிப்பிட்ட ஒரு பக்கம், தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதில் தற்போதைய கரோனாவைக் குறிப்பிடும் வகையில், 'கோரோன மாத்திரை' என்ற தலைப்பில், பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டிய மாத்திரை குறித்த விபரங்கள் அதில் காணப்படுகின்றன.
ஆனால் உண்மை என்னவெனில் 'கோரோசனம் மாத்திரை' என்பதிலுள்ள 'ச'வை நீக்கிவிட்டு 'கோரோன' என மாற்றி சமூக விரோதிகள் சிலர் இந்த வதந்தியைப் பரப்பியுள்ளனர். இது சித்த வைத்தியத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் செயலாகும் என, நாட்டு வைத்திய ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
கோரோசனம் மாத்திரை குறித்து ஆராய்ந்த விளக்கம்...
கடந்த 1936-ஆம் ஆண்டு வெளியான டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதியின் தொகுதி 2, பகுதி 2-ஆவது நூலிலுள்ள 1308-ஆம் பக்கத்தில் இந்தக் குறிப்பு விளக்கமாகக் காணப்படுகிறது. கோரோசனை என்பது மாட்டு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கல்லைப் போன்ற ஓர் கடினமான வஸ்து.
கோரோசனம் மாத்திரை குறித்த தரவு இது சாதாரணமாக பசு, எருது இவற்றின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும். மான், வெள்ளாடு, ஒட்டகம், மீன், பாம்பு இவைகளின் பித்தப் பையினின்று எடுக்கலாம். இதே மாதிரியாகத் தாது வர்க்கங்களிலும் உண்டு. ஆனால் இது பல மாதிரியாகவும், பெரிதாகவும், சொர சொரப்பாகவும் அநேக நிறங்கள் கலந்ததாகவும் உண்டு.
இக்கோரோசனை சிறு கசப்பாகவும், தித்திப்பாகவும், வாசனையுடையதாகவும் இருக்கும்' என்று புத்தகத்தில் விளக்கங்கள் நீள்கிறது. மேலும், சுரம், குளிர், சீதளம், நீர்க்கோர்வை, இசிவு, மாந்தம் இவைகளைப் போக்கும். இதைக் கடைச் சரக்குகளோடு சேர்த்து மாத்திரைகளாக செய்து கடைகளிலும் விற்பார்கள். இம்மாத்திரையைக் கஷாயத்தில் இழைத்துக் கொடுக்கக் குழந்தைகளின் பிணியைத் தீர்க்கும்' என்று குறிப்பிடுகிறது.
வாட்ஸ்அப்பில் உலா வரும் கோரோசனம் மாத்திரையும், கரோனாவும் - எது உண்மை..? இந்தக் கோரோசனைக் குறிப்பைத்தான் கோரோன மாத்திரையாக மாற்றி, வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புகிறது ஒரு கும்பல். இதனையும் பலர் உண்மை தெரியாமல் பிறருக்குப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். கவனம் தேவை மக்களே...!