மதுரை: திருச்சியைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில், "கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி எனது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில், எனது கணவருக்கு கரோனா தொற்று உள்ளது எனத் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக முன்பணமாக ரூ. 50,000 செலுத்தினோம். பின்னர் 2 நாள்கள் கழித்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த மருத்துவமனை தரப்பினர் கட்டாயப்படுத்தினர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, எனது கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பின்னர், நெஞ்சு வலி காரணமாக கடந்த நவம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.