மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலையின் தீவிரம் பொதுமக்கள் அனைவரையும் கடுமையாக பாதித்து வருகிறது. புள்ளிவிவரப்படி, மதுரை மாவட்டத்தில்நேற்று (மே.21)மட்டும் 53 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 12 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 757 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக மதுரையில் 1500 லிருந்து 2000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் சராசரியாக 13 விழுக்காடாக உள்ளது. 192 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று அதிகரிப்பால் சிகிச்சை பெருவதற்கான ஆக்ஸிஜன் படுக்கைகள் மருத்துவமனைகளில் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தோப்பூரில் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று(மே.21) திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிவரும் 10 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் என 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: வீடுகள் தரைமட்டம், மூவர் உயிரிழப்பு!