மதுரை:ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குற்றவியல் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒரு தனியார் யூ-ட்யூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான அவரது உத்தரவில், ‘ சவுக்கு சங்கர் என்பவர் ஊடகத்துறையில் உள்ளவர், விமர்சகர். தனிநபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளை கடுமையாகத் தாக்கி செயல்படுகிறார். அவர் கடந்த சில மாதங்களாக என் மீதும் எனது தீர்ப்புகள் குறித்தும் உண்மைக்குப்புறம்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது யூ-ட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உரிய முறையில் விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்துசெய்தேன். இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளில் கண்டித்திருந்தார். எனது தீர்ப்புகள் குறித்து கருத்துதெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. அவரது புண்படுத்தும் கருத்துகள் மூலம் எனது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன்’ எனக் கூறியிருந்தார்.