பரமக்குடியை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 30 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் மிகவும் பாதிப்படைந்த பல தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால், பல லட்சம் தொழிலாளர்கள் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர். இவர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து இடைக்கால உத்தரவு வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, பதிவைப் புதுப்பிக்க தொழிலாளர்களுக்கு அஞ்சல் வழியாகவும், இணையதளம் வழியாகவும் வழிவகை செய்து, அவர்களுக்கும் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க சொல்லியது. ஆனால், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம், 12 லட்சம் தொழிலாளர்களிடம் உரிய விளக்கம் அளிக்காமல் அவர்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை ஏற்று நலவாரியத்தில் தொழிலாளர்களின் பதிவை புதுப்பித்து, கரோனா நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் “ எனக் கோரப்பட்டிருந்தது.