தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடலில் எண்ணெய் கசிவை தடுக்கக்கோரிய வழக்கு; துறை அலுவலர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - எண்ணெய் கசிவு தடுப்பு குழு

கொழும்புவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு, கடலில் பரவுவதைத் தடுக்கக்கோரிய வழக்கில் ஒன்றிய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்கள் உள்ளிடோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம், hc madurai bench, கொழும்புவில் கப்பல் விபத்து
கடலில் எண்ணெய் கசிவை தடுக்கக்கோரிய வழக்கு

By

Published : Jun 18, 2021, 5:41 PM IST

மதுரை:ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்:

"கடல் பரப்பில் எண்ணெய் கப்பல்களில் விபத்தோ, கசிவோ ஏற்பட்டால் கடல் பரப்பளவில் அதிகளவிலான தூரத்திற்கு எண்ணெய் படலம் ஏற்படுகிறது. இதனால், கடலின் இயற்கை வளம், மீன் வளம் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கின்றன.

இதுவரை அமைக்கப்படவில்லை

இதுபோன்ற விபத்து நேரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும், முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், கடலோர பகுதிகளிலும் உரிய குழு அமைக்க வேண்டுமென தேசிய எண்ணெய் கசிவு தடுப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது கூடி தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.

இலங்கையில் விபத்து

தற்போது, இலங்கை கொழும்பு பகுதியில் ஒரு கப்பல் தீவிபத்தில் சிக்கியுள்ளது. இதிலிருந்து எண்ணெய், ரசாயன திரவங்கள் போன்றவை கடலில் கசிந்துள்ளன. இவை இந்திய கடல் எல்லைப் பகுதியிலும் பரவியுள்ளது.

எனவே, மாநில, மாவட்ட, கடலோர பகுதிகளுக்கான எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை உடனடியாக ஏற்படுத்தவும், கொழும்பு கப்பல் விபத்தின் எண்ணெய் கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

அலுவலர்கள் பதலளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வுக்கு முன்பு இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்கள், வெளியுறவுத்துறை முதன்மை செயலர், கடலோர காவல் படை இயக்குநர் ஜெனரல், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு கடல் வாரிய தலைமை செயற்பொறியாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சிறப்பு டிஜிபி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details