தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா விழிப்புணர்வு களத்தில் இறங்கிய கல்லூரி மாணவி - சபாஷ் சந்திரலேகா - கரோனா

மதுரை: கரோனா வைரஸ் தொற்று தீவிரப் பரவல் நிலையை அடைந்துள்ள இந்த நேரத்தில் அது குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் துணிச்சலாய் இறங்கி சேவை புரிந்து வருகிறார் கல்லூரி மாணவி சந்திரலேகா.

awareness
awareness

By

Published : Apr 17, 2020, 8:11 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை கிராமத்தில் வசித்து வருபவர்தான் மாணவி சந்திரலேகா. மதுரையில் உள்ள திருமலை மன்னர் கல்லூரியில் சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சமூக சேவையில் ஆழ்ந்த ஈடுபாடும், நோக்கமும் கொண்ட சந்திரலேகா, அதன் காரணமாகவே இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு துணிச்சலாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். இதுகுறித்து மாணவி சந்திரலேகா கூறியபோது, ”சேவை நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காரணத்தால் எனது படிப்பையும் அந்தத் துறையிலேயே தேர்ந்தெடுத்தேன். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வு எனது கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் இல்லை. ஆகையால் கை-கால் சுத்தம், சமூக இடைவெளி முகக் கவசம் அணிந்து வெளியே செல்லுதல், தனித்திருத்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

கரோனா குறித்த விழிப்புணர்வு பரப்புரையில் மாணவி சந்திரலேகா

எழுமலை பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் நாள்தோறும் வழங்கி வருகிறேன். அதேபோன்று காவல்துறை அமைத்துள்ள ஒலிபெருக்கி மூலமாக கரோனா வைரஸ் விழிப்புணர்வு முழக்கங்களை, உரைகளை நிகழ்த்தி வருகிறேன். மதுரை மாவட்ட நிர்வாகத்தால் எழுமலை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த விழிப்புணர்வு என்னுடைய கிராம மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன். அதன் பொருட்டு இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன் ” எனப் பெருமைபடக் கூறினார். வாழ்த்துகள் சந்திரலேகா.

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் மாணவி சந்திரலேகா

இதையும் படிங்க: ஒரு காவலர் ஒரு குடும்பம்: மதுரை போலீசாரின் மகத்தான சேவை!

ABOUT THE AUTHOR

...view details