மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (24). இவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ராம்குமார் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்தார். இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உறவினர் ஒருவர் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
பிரவீனா இணைய வழியே பங்கு வர்த்தகம் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பன்மடங்குடன் திருப்பி தருவதாகவும் கூறியதால் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை ராம்குமார் வழங்கியுள்ளார். தொடக்க காலத்தில் 36 ஆயிரம் ரூபாயை பிரவீனா வழங்கினார். பின்னர் பணம் வழங்கவில்லையாம்.
பிரவீனாவிடம் ராம்குமார் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக பிரவீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம்குமார் மீதும், அவர் உறவினர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் தானும், தன் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். தன்னுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதோடு பிரவீனா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பலமுறை ராம்குமார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சக்கர நாற்காலியில் எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர் - பெற்றோர்கள் பாராட்டு