மதுரை: அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 35 கி.மீ. தொலைவில் உசிலம்பட்டி தாலுகாவில் அமைந்துள்ளது பாப்பாபட்டி.
இன்று அமைதியாக இருக்கும் இந்தக் கிராமம்தான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கியது என்றால், யாராலும் நம்ப முடியாதுதான்.
பொதுவாகவே உசிலம்பட்டி தாலுகா பல்வேறு சாதி சச்சரவுகளுக்குப் பெயர் பெற்றதாக ஒருகாலத்தில் இருந்தது. இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியான நல்லிணக்கப்பாதைக்கு திரும்பத் தொடங்கியிருப்பதற்கு பாப்பாபட்டி கிராமமும் ஒரு காரணம்தான்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் பட்டியலின மக்கள் தலைவர்களாக நீடிக்க முடியாத துரதிருஷ்டநிலை ஒரு காலத்தில் இருந்தது. இதன் காரணமாக ஆட்சியாளர்களுக்கு இங்கு தேர்தல் நடத்துவது என்பது மிக மிக சவாலான காரியமாகவே இருந்தது.
நடத்திகாட்டிய உதயச்சந்திரன்
தேர்தல் நடக்கும், ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின வேட்பாளர் பதவி விலகிவிடுவார். இப்படியே நீடித்த இந்த அவலத்திற்கு கிராம மக்களின் ஒத்துழைப்போடு சமரசம் காண முயன்றவர் அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய தனிச் செயலருமான உதயச்சந்திரன்.
நடைபெறவே வாய்ப்பில்லை என்ற சூழலை மாற்றி மேற்காணும் மூன்று ஊராட்சிகளிலும் 2006ஆம் ஆண்டு தேர்தல் நடத்தி சாதனை படைத்தவர் உதயச்சந்திரன் என்றால், அப்போது உதயச்சந்திரனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தியவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர்.
ஸ்டாலினுக்கு பாப்பாபட்டிக்குமான தொடர்பு
அவர் யாரென்றுதானே கேட்கிறீர்கள்? இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் அவர். தற்போது தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தான் பங்கேற்கவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தை அக்டோபர் 2ஆம் தேதி மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் மு.க. ஸ்டாலின் நடத்துவதற்கு மேற்கண்ட நிகழ்வுகள்தான் முக்கியக் காரணம்.
முதலமைச்சர் பங்கேற்கவிருக்கும் கிராம சபைக் கூட்டம் என்பதால், பாப்பாபட்டி கிராமத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் தற்போது சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கி சுழன்றுகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஈடிவி பாரத் ஊடகத்திற்காக பாப்பாபட்டி சென்று அங்குள்ள மக்களோடு உரையாடினோம். தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்க ஒட்டுமொத்த கிராமமே ஆவலுடன் காத்திருப்பது தெரிந்தது. அத்துடன் முதலமைச்சரிடம் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுகோள்விடுத்துள்ளனர்.