தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீனத் தமிழச்சி நிறைமதியின் மதுரை தமிழ்ப் பயணம்! - Chinese Tamil Professor

சீனாவில் தமிழ் பரப்பும் ஆர்வத்தோடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்க வந்துள்ளார் சீன தமிழ்ப் பேராசிரியை நிறைமதி. பூவிதழ் மலர்வதைப் போன்றது தமிழ் மொழி என்று சிலாகிக்கிறார் இந்தப் பெண்மணி. நிறைமதி குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

சீனத் தமிழ் பேராசிரியர் நிறைமதி
சீனத் தமிழ் பேராசிரியர் நிறைமதி

By

Published : Dec 13, 2019, 11:13 PM IST

உலகமெங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் செஞ்சீனத்தில் தமிழ் பரப்பும் முனைப்போடு மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருக்கிறார், சீன தமிழ் பேராசிரியை நிறைமதி. இவரின் தாய் மொழி போன்று தமிழும் இவரிடத்தில் மழலையாய் கொஞ்சுகிறது. தமிழ் எழுத்தை மிக நேர்த்தியாக எழுதியும் வாசித்தும் வரும் நிறைமதி, தமிழின் பெருமை குறித்து மிகப் பெருமிதத்தோடு பகிர்கிறார். ஜாங் ஸீ என்ற நிறைமதியாகிய இவரின் தமிழ் ஆர்வம் எல்லோரையும் வியக்க வைக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், " சின்னப் பெண்ணாக இருந்தபோதும் கூட தமிழ் மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள நிறைமதியை நாங்கள் பெருமிதத்தோடு பாராட்டி மகிழ்கிறோம். தமிழ் மொழியில் எழுதவும் வாசிக்கவும் மிக நன்றாக தெரிந்திருந்தும் கூட, இன்னும் தமிழை நன்றாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தின் பொருட்டு 27 நாள் பயிற்சிக்காக இங்கே வந்திருக்கிறார். தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நிறைமதி பேசிய பேச்சு, இங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது" என்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் மற்றும் தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரின் பேட்டி

சீன நாட்டில் உள்ள யுனான் மிஞ்சூப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் சார்பாக நிறைமதி, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பயிற்சிக்கு வருகை தந்திருக்கிறார். இவர் வெறும் பேச்சுப்பயிற்சி மட்டுமன்றி மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள், கீழடி போன்ற வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் இடங்களைப் பார்வையிட்டு தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வேளாண், வாழ்வியல் போன்றவற்றை நேரடியாக உணர்ந்து வருகிறார்.

சீனத் தமிழ் பேராசிரியர் நிறைமதியின் தமிழ்ப் பயணம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறையின் தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி பேசுகையில், ' கடந்த நவம்பர் 22ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி வரை நிறைமதிக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே தனி ஒரு நபருக்கு மட்டும் தமிழறிஞர்கள் அனைவரும் வந்திருந்து பயிற்சி வழங்குவது இதுதான் முதல் முறை. இதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது' என்று கூறினார். மேலும் இந்த பயிற்சி காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கருணாகரன், ம. திருமலை, அறிஞர்கள் நடராஜன், ராமமூர்த்தி, வேதாசலம், சேதுராமன் உள்ளிட்ட பலர் தனக்கு வகுப்பு எடுத்ததை மிகப் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார் நிறைமதி.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நிறைமதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ' தான் தற்போது பணி புரியும் தனது பல்கலைக்கழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தான் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. தற்போது அத்துறையில் சீன மாணவர்கள் 6 பேர் தமிழ் மொழியை மிக ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். அவர்களுக்கு மேலும் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதற்காக தான் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளேன். தங்கள் துறையில் வரும் ஆண்டு மேலும் 12 மாணவர்களை தமிழ்த்துறையில் புதிதாக சேர்க்க உள்ளோம்' எனக் கூறினார்.

சீனத் தமிழ் பேராசிரியர் நிறைமதியின் சிறப்புப் பேட்டி


தொடர்ந்து கொஞ்சும் தமிழில் பேசிய அவர், "இந்த பயிற்சி காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கருணாகரன், ம. திருமலை, அறிஞர்கள் நடராஜன், ராமமூர்த்தி, வேதாசலம், சேதுராமன் உள்ளிட்ட பலர் எனக்கு வகுப்பு எடுத்தனர். சில நாள் பயிற்சியிலேயே தனக்கு நல்ல தமிழறிவு கிடைத்துள்ளது. இதனை அப்படியே சீனாவிலுள்ள எனது தமிழ் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பேன்" என்று ஆர்வம் மேலிட பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் அவர், "இங்குள்ள தமிழ் மாணவர்கள் சீனாவுக்கு வருகை தந்து கல்வி பயில வேண்டும். அதேபோன்று சீன மாணவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

தமிழ்மொழியின் மீது தீராக்காதல் கொண்டு அதனை முறையாக கற்றுக்கொண்டும்; தன் தாய் நாட்டில் பரப்பியும் வரும் 'நிறைமதி' என்ற 'ஜாங் ஸீ' தமிழர்களின் பாராட்டுக்குரியவர் தான்.

இதையும் படிங்க:

"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடம் நடத்தும் ஆசிரியர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details