மதுரை: கடந்த நான்கு மாதங்களாக சேக்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் குன்றிய இளம்பெண், அவரது ஒரு வயது ஆண் குழந்தை உள்பட மூன்று குழந்தைகளுடன் ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தையான மாணிக்கம், திடீரென கரோனாவால் உயிரிழந்ததாகக் கூறி, போலியான ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாக அந்த முதியோர் இல்லத்தின்மீது புகார்கள் எழுந்தன.
தாய்மார்களின் கண்ணீர்
இதையடுத்து, முதியோர் காப்பகத்தில் இருந்த 82 பேர் மதுரையிலுள்ள பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆறு தாய்மார்களுடன் எட்டு குழந்தைகள் தனியாக குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இதயம் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்ற ஆதரவற்ற பெண்ணின் இரண்டு வயது பெண் குழந்தையான தனம்மா, கடந்த 10 நாள்களுக்கு மேலாக காணவில்லை என தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது. தனது குழந்தையை அழைத்து வந்தால் மட்டும்தான் செல்வேன் எனக் கூறி கண்ணீர் விட்டு அந்தத் தாய் கதறி அழுதது அங்குள்ளவர்களை கண்கலங்க வைத்தது.
நகைக்கடை அதிபரிடம் குழந்தை
இதனையடுத்து, மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவலர்களின் விசாரணையில், அக்குழந்தை மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் உள்ள நகைக்கடை அதிபருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும், கடந்த 30 நாள்களுக்கு முன்பாக காணாமல் போன தனம்மா என்ற பெண் குழந்தை, மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள கல்மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்டதும் காவல் துறையால் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்குழந்தையை மீட்கும் முயற்சிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் குழந்தை இறந்ததாக நாடகம்: தொண்டு நிறுவனம் மீது புகார்!