மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "உலகின் மிகப் பழமையான மொழி 'தமிழ்'. தமிழ்நாட்டில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கிவரும் சூழலில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டுவருகின்றன.
ஆனால், இந்தப் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவசக் கல்வி என்னும் பெயரில், ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்குவதுபோல் தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 271 மாணவர்கள் பயிலும் சூழலில், 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள்.
அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. ஆகவே, தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், தமிழைக் கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்.