மதுரை:புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் காணாமல்போன தனது 17 வயது மகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். எனது 17 வயது மகன் சண்முகப்பிரியன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறான்.
2019 செப்டம்பர் மாதத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் தேடியும் எவ்வித பயனும் இல்லை. இதனையடுத்து நான் கொடுத்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகனை கோவையில் சிலர் பார்த்ததாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று என் மகனின் போட்டோவை காண்பித்துவிசாரித்தோம்.
அங்குள்ள சில ஓட்டல்களில் சென்று என் மகன் வேலை கேட்டதாகவும், அவர்கள் வேலை தரவில்லை என்பதும் தெரிந்தது. அங்கு பல இடங்களில் தேடியும், எனது மகனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இது குறித்து புதுக்கோட்டை காவல் துறையிடம் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நீதிமன்றம் தலையிட்டு, எனது மகனை மீட்டுத்தர காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், காணாமல்போன மாணவனின் ஆதார் விவரங்கள் கிடைக்கப் பெறாததால் மாணவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஆதார் விவரங்களை தனிநபர்களுக்குத்தான் வழங்கக்கூடாது. இதுபோல வழக்கு விசாரணைகளில் உதவும் வகையில் புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே என யோசனை தெரிவித்து இது குறித்து ஆதார் ஆணையம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்யும் புதிய சட்டம் விரைவில்...!'