தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பணையை அகற்றக்கோரிய வழக்கு: பொதுப்பணித்துறைச் செயலர் பதிலளிக்க ஆணை

திண்டுக்கல் காமராஜர்சாகர் அணையில் கட்டிய தடுப்பணையை அகற்றக்கோரிய வழக்கில் பொதுப்பணித்துறைச் செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : Jan 29, 2021, 4:55 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் கிரில் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.
அதில், 'கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் கோடகனர் அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. மேலும் காமராஜர்சாகர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. சுமார் 4500 மில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கி வைத்து, சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அணையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தண்ணீர் செல்லும் வழியில் ராஜவாய்க்கால் ஏற்படுத்தப்பட்டு, சுமார் 150 அடி நீளத்தில் 20 அடி அகலத்தில் 10 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் காமராஜர்சாகர் அணை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களில் விவசாயம் பாதித்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து 15 நாள்கள் காமராஜர்சாகர் அணைக்குத் தண்ணீர் செல்லவும்; 15 நாட்கள் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், சில கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காமராஜர்சாகர் அணை மற்றும் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல தடை விதிக்கப்பட்டது.

எனவே, கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை காமராஜர்சாகர் அணையில் தேக்கி வைத்து விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் அமைய வேண்டும். மேலும் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தடுப்பு அணை கட்டியதை அகற்ற உத்தரவிட வேண்டும்' என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'நாராயணசாமியின் அழுத்தத்தால் ஆளுநருக்கு எதிரானப் போராட்டங்கள் நடக்கின்றன'- நமச்சிவாயம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details