சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநில அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் தமிழ்நாடு அணிக்காக ஐந்து போட்டிகளில் களமிறங்கி, இரண்டு அரை சதங்களுடன் அதிரடியாக 180 ரன்கள் குவித்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவகுமார் என்ற சச்சின் சிவா, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அணியை வழி நடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சச்சின் சிவா கூறுகையில்,
சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம். கல்லூரியில் படிக்கும்போதுதான், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக கிரிக்கெட் போட்டி இருப்பது தெரிந்தது. என்னுடைய திறமையை நிரூபித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தேன். 2013ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் தொடரில் கர்நாடகாவை வீழ்த்தி, மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில், 'மேன் ஆப் தி சீரியஸ்' வென்றதால், எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது.
2017ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 64 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தேன். அதேபோல், 2018ல் அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தேன். தமிழ்நாடு அணியில், ஆல் ரவுண்டராக சிறப்பான முறையில் செயல்பட்டதால், இந்திய அணிக்கு 2015ல் தேர்வு செய்யப்பட்டேன்.