சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை அடுத்து வீரம் வாய்ந்த முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு கடும் பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
களைகட்டும் காளை தயார் பயிற்சி
வழக்கமாக பொங்கல் பண்டிகைகளைத் தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பல மாவட்டங்களில் குறிப்பாக தென், மத்திய மாவட்டங்களில் கண்டுகளிக்கலாம். எனவே இந்தப் போட்டிகளில் பங்குபெறும் காளைகளைத் தயார்ப்படுத்தும் பயிற்சிகள் கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம்.
ஏனெனில், காளைகளுக்குச் சத்தான தீவனம் வழங்குவது முதல் அவற்றின் உடல்நலத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் காளைகளின் உரிமையாளர்கள். மேலும் பயிற்சிகளைப் பொறுத்தமட்டில் காளைகளுக்கு நீச்சல், நடை பயிற்சி நாள்தோறும் கொடுக்க வேண்டும்.
மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் பிடிக்காதவாறு, காளைகளைச் சீறிப்பாயும் வகையில் அவற்றின் கொம்புகளைத் தரையில் குத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் காளைகளுக்குப் பருத்திக்கொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவற்றை உணவுகளாக அளித்துவருவதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
வசமான வாடிவாசல் எது?
பொதுவாக வெவ்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதால், போட்டிகள் நடைபெறும் வாடிவாசல்களின் தன்மைகள் குறிப்பாக இட அளவைப் பொறுத்து, காளை மாடுகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்ட மாடுகளைப் போட்டிகளில் இடம்பெறச் செய்கின்றனர். குறிப்பாக வாடிவாசல் குறுகியதாக இருந்தால் துள்ளிக்குதிக்கும் மாடுகளைப் பாய விடுகின்றனர்.
இதில் களத்தில் உள்ள வீரர்கள் வாடி வாசலிலிருந்து வெளியே வரும்போதே மாடுகளின் திமிலைப் பிடிக்க வேண்டும். இல்லையெனில் காளைகள் வீரர்களை எதிர்கொண்டு ஓடிவிடும். இதேபோல வாடிவாசல் சற்று அகலமாக இருந்தால் துணிச்சலான காளைகளைப் பயன்படுத்தி மாடுபிடி வீரர்களை மிரளவைக்கின்றனர்.இந்தப் போட்டியில் வீரர்கள் மாடுபிடி களத்தின் மத்தியில் நின்றுகொண்டே மாடுகளை அடக்கலாம்.
காளை பயிற்சியாளர்கள் கருத்து
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர், ராஜா கூறுகையில், "எனது காளையை சுமார் எட்டு ஆண்டுகளாக வளர்த்துவருகிறேன். இந்தக் காளையைப் பராமரிப்பதைப் பொறுத்தமட்டில், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு நாள்தோறும் கொடுக்கப்படுகின்றன.
மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்பு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன" எனக்கூறிய அவர், காளைக்கு அல்லூர் அழகர் எனப் பெயர் சூட்டப்பட்ட நிலையில் எந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தாலும் தன்னுடைய காளை பங்கேற்கும் என்றார் பெருமிதத்துடன்.
ஜல்லிக்கட்டு மாநிலத் துணைத் தலைவர்
இதேபோல தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டின் மாநிலத் துணைத் தலைவர் எம். காத்தான் கூறுகையில், "பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு காளை மாடுகளை வளர்த்துவருகிறோம். ஒரு மாட்டிற்கு குறைந்தபட்சம் நாள்தோறும் 750 ரூபாய் செலவழித்துவருகிறோம்.