மதுரை: பாஜக சார்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே மஸ்தான்பட்டியில் தொடங்கியது. இதில் அக்கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிறைவுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்மொழியின் பெருமை குறித்து பிரதமர் மோடி, தான் செல்கின்ற இடமெல்லாம் பேசி மகிழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இவையெல்லாம் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் அவர் தருகின்ற மரியாதையாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது தமிழ்நாட்டிற்கு 13ஆவது நிதிக் குழு மூலமாக 94 ஆயிரத்து 540 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு 15-வது நிதிக் குழு மூலமாக 5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜவுளித்தொழில் வளர்ச்சிக்காக, கடந்த அரசுகள் எதுவும் வழங்காத நிலையில், மோடி ரூ.1,600 கோடி வழங்கினார். பாதுகாப்புத்துறைக்காக ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ஓசூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் அதிகம் வேலைவாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது.
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. அதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 95 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 66 லட்சம் பேருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் பயனடைந்துள்ளனர். பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பிரதமர் மோடி கொண்டு வருகின்ற திட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.