தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஓவியங்களால் சரணாலயமாய் மாறிய சாலையோர சுவர்கள்' - Wall paintings on behalf of Madurai Corporation

மதுரையின் பல்வேறு இடங்களில், சுவர்களில் அரியவகை பறவைகள், விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுதந்திரமாய் திரிந்த பறவைகளைத் தற்போது சுவர் ஓவியங்களில் மட்டுமே காண முடிகிறது என்ற ஏக்கம்தான் இந்தச் சிறப்புத் தொகுப்புக்கான முன்னெடுப்பு.

மதுரையில் பொது சுவர்களில் பறவை, விலங்குகளின் ஓவியங்கள்
மதுரையில் பொது சுவர்களில் பறவை, விலங்குகளின் ஓவியங்கள்

By

Published : Mar 30, 2020, 7:31 PM IST

Updated : Mar 31, 2020, 7:00 AM IST

"நீண்டு கிடக்கும் வீதிகளும் -வான் நிமிர்ந்து முட்டும் கோபுரமும்!

ஆண்ட பரம்பரை சின்னங்களும் - தமிழ் அழுந்தப் பதிந்த சுவடுகளும்!

காணக் கிடைக்கும் பழமதுரை - தம் கட்டுக் கோப்பால் இளமதுரை"

- என்ற வைரமுத்துவின் வரிகள் மட்டுமல்ல, வரலாற்றின் பெரும் பகுதிகளும் மதுரையின் புகழைப் பறைசாற்றும். ஆனால் தற்போது மதுரை கொஞ்சம் கொஞ்சமாக தன்னியல்பை இழந்துவருகிறது. நாகரிக வளர்ச்சியில் சிக்கி நாளும் தன் இயல்பையும் இயற்கையையும் பிரிந்துதவிக்கிறது. அதை மீட்பதற்கு இயற்கை செயற்பாட்டாளர்கள் தயாராக இருப்பினும் அவர்களைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கும் மதுரைக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை உள்ளிட்ட சில அமைப்புகளோடு இணைந்து ஓர் புதிய பணியை மேற்கொண்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களின் வெளிப்புற சுவர்களிலும், பொது இடங்களிலும் பறவைகள், விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டு அவற்றின் பெயர்களுக்கு உரிய விளக்கங்களும் எழுதிவைக்கப்பட்டுள்ளன.

'வாகன இரைச்சலுக்கிடையில் மிளிரும் வண்ண ஓவியங்கள்' - மதுரை மாநகராட்சியின் புது முயற்சி

வாகனப் புகையாலும் இரைச்சலாலும் மாசடைந்து நிற்கும் சாலையோர சுவர்கள் தற்போது வண்ண ஓவியங்களுடன் காட்சியளிக்கின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளையும் விலங்குகளையும் காக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்த ஓவியங்கள் நமக்கு விடுக்கிறது. மேலும் சில அரியவகை விலங்குகளும், இலக்கியங்களில் பேசப்படும் பறவைகளும்கூட இங்கு ஓவியமாக்கப்பட்டுள்ளது.

வெறுமனே சாலையைக் கடந்து செல்பவர்களுக்கு இது கண்காட்சி போன்றதுதான். இங்கு ஓவியங்களைத் தத்ரூபமாக வரைந்ததோடு மட்டுமல்லாமல் கூடுதல் தகவல்களையும் குறிப்பிட்டிருப்பது பார்ப்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சுதந்திரமாய் திரிந்த பறவைகள் சுவர் ஓவியங்களில்...

இது குறித்து பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன் கூறுகையில், "இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது சங்க இலக்கியங்களில் கூறப்படும் பறவைகள் அனைத்தையும் தேவையான விளக்கங்களோடு மதுரை மாநகராட்சி வரைந்து காட்சிப்படுத்தியிருப்பது இன்றைய காலகட்டத்தில் மிகத் தேவையான ஒன்று. பொதுமக்களிடம் மட்டுமன்றி அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய நல்ல முயற்சியாகவே இதை நான் பார்க்கிறேன்" என்கிறார்.

விலங்குகளின் சரணாலயமாய் மாறிய சாலையோர சுவர்கள்

இது குறித்து தெரிவித்த மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், "சீர்மிகு நகரம் என்ற பெயரால் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்த பழமைவாய்ந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தூசிகள் நிறைந்த நகரமாக மதுரை மாறிவிட்ட நிலையில் இதுபோன்ற ஓவியங்கள் எந்தவிதத்தில் சரியானதாக இருக்கும்?

மரங்கள், பறவைகள் கானுயிர் கடந்து வாழ்ந்தால்தான் அங்கு வாழ்கின்ற மக்கள் சிறப்பாக வாழ முடியும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மதுரை மாநகராட்சி செயல்பட்டுவருகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

வருங்கால தலைமுறையினருக்கு இந்த ஓவியங்களின் மூலம் பறவைகள், விலங்குகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இது இருந்தாலும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: குட் பை தமுக்கம் மைதானம்!

Last Updated : Mar 31, 2020, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details