மதுரை: சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி வீரமணி. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்தவர்.
இவரது தங்கை ரேகா சென்னையில் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்துவரும் ரேவதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தோஹாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆசிய சாம்பியனாகவும், தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றுவரும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த ஜூன் 29ஆம் தேதி 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாம்பியனாகவும் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஓட்டப்பந்தய வீராங்கனை ரேவதியின் கதை
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டுவரும் ரேவதியை நமது 'ஈடிவி பாரத்' இணையதளத்தின் செய்தியாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, "ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சார்பாக நானும் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு தடைகளை கடந்து இந்தச் சாதனையை படைத்தது பெருமையாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஒலிம்பிக்கில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பதக்கங்களை குவிப்பேன்.
என்னைப் போன்று வளர்ந்துவரும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, நல்ல வாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என்னைப் போன்றவர்களை ஊக்குவிக்கிறது. ஆகையால் இந்தச் சமயத்தில் எனது தனிப்பட்ட கோரிக்கை என்று எதுவும் இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழச்சிகள்!'