மதுரை: கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூர் கிராமத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டாய மத மாற்றம் செய்ய முயன்றதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த சிஸ்டர் ரோசரி என்பவர் இந்த வழக்கு சம்மந்தமாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ”இமாகுலேட் ஆர்ட் மேரி மடத்தின் தலைமை கன்னியாஸ்திரி உள்ளேன். இந்தியாவில் 1844 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாக உள்ளது. இந்த சொசைட்டியின் கீழ் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் முதியோர் இல்லம் சிறப்புப் பள்ளி உட்பட நூற்றுக்கணக்கான உதவி மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டு இன்றுவரை நடைபெற்று வருகிறது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாணவி லாவண்யா எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அன்று முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு உடனடியாக அவருடைய வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
சிஸ்டர் சகாய மேரி கைது
இந்நிலையில் 16ஆம் தேதி மாலை காவல் துறையின் மூலம் மாணவி லாவண்யா விஷம் அருந்திய தகவல் கிடைத்தது. 19ஆம் தேதி மாணவி இறந்துவிட்டார். வழக்கில் சிஸ்டர் சகாயமேரி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.