மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஆணையத்தின் நோக்கம் குழந்தைகளை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது, குழந்தை தொழிலாளர், ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதுமாகும். மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு, செயல்படும் அந்த ஆணையத்தின் மூலம், ஆதரவற்ற, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகள் மீட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக, குழந்தை தொழிலாளர்களை மீட்க 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு, தமிழ்நாட்டிலிருந்து அதிகப்படியான அழைப்புகள் வந்துள்ளன.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு!
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்க கோரிய வழக்கில், எவ்வளவு குறுகிய காலத்திற்குள் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தலைவர் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 1647 காப்பகங்களில், சுமார் 87 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஆணையத்தின் தலைவர் முக்கிய பங்கு வகிப்பார். தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்க கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் பாலியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுகின்றனர், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்களை நியமிப்பது மிக முக்கியமானதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்கள் எவ்வளவு காலத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தெடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:வாஜ்பாய் வணங்கிய மதுரை சின்னப் பிள்ளை!