மதுவுக்கு எதிராக பல்வேறு வகையில் போராடி வரும் இளம் போராளியும், வழக்கறிஞருமான நந்தினி, அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தால் 15 நாள் நீதிமன்ற காவலில் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், ஜூலை ஐந்தாம் தேதி நந்தினிக்கும், குணா ஜோதிபாசு என்பவருக்கும் நடைபெறுவதாக இருந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கு டும் டும் டும்..! - மது ஒழிப்பு போராளி
மதுரை: மது ஒழிப்பு போராளியும், வழக்கறிஞருமான நந்தினிக்கு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், நந்தினிக்கும் அவர் தந்தை ஆனந்தனுக்கும் திருப்பத்தூர் நீதிமன்றம் பிணை வழங்கியது. இதனையடுத்து இருவரும் நேற்று மாலை மதுரை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகினர். நந்தினிக்கும், குணா ஜோதிபாசுவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இது குறித்து நந்தினி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்றிரவு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம். 'இன்று (10.07.19) மதுரை மாவட்டம், தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.