மதுரை: மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைரம் சந்தோஷ். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை 2020 டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14000, மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2000 மினி கிளினிக்குகளில், 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்காகச் சுகாதாரத் துறை இயக்குநர், 2020 டிசம்பர் 15ஆம் தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்படி, தனியார் முகமை மூலம் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர் தனியார் முகமை மூலம் தேர்வுசெய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
கரோனா நோய்த்தொற்று நேரங்களில், அனுபவமில்லாத செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் முகமை மூலம் தேர்வுசெய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே, மருத்துவப் பணியாளர்கள், செவிலியரை முகமை முறையில் தேர்வுசெய்ய 2020 டிசம்பர் 15ஆம் தேதி சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை ரத்துசெய்து உத்தரவிடும்படி கோரியிருந்தார்.