மதுரை:இன்று காணும் பொங்கலை முன்னிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியர் தலைமையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உள்பட விழா கமிட்டியினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு, சுற்று ஒன்றுக்கு 75 பேர் வீதம், 8 சுற்றுக்களாக நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வாடிவாசல் வழியில் சீறிப்பாய 800 காளைகளும், அதனை அடக்கியாள 655 வீரர்களும் களத்தில் உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கும் வீரர்களுக்கும், இரண்டு கார்கள், நாட்டு பசு உள்பட கண்ணைக் கவரும் பரிசுகள் காத்திருக்கின்றன.
போட்டிக்கு கரோனா பரிசோதனை செய்த சான்றிழ்களோடு வரும் வீரர்கள் இறுதி பரிசோதனை செய்து களத்திற்கு வீரர்கள் அனுப்ப படுகின்றனர். மாடுபிடி வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தே போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.