தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பள்ளிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு குழந்தைகள் செல்லும் நிலை வரலாம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் - school students

மதுரை: சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் பள்ளிக் குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டரோடு பள்ளி செல்லும் நிலை வரலாம். ஆகையால் அச்சூழல் வராமல் எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர். அது குறித்த ஓர் செய்தித் தொகுப்பு...

students
students

By

Published : Mar 7, 2020, 4:59 PM IST

எங்கு பார்த்தாலும் புகை மண்டலம்...மரங்கள் அற்ற சாலைகள்...தூசிகளுக்கிடையே பயணம்...என நாம் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதை வியப்பாகப் பார்த்த நாம்தான், இப்போது தூயக் காற்றை காசு கொடுத்து சுவாசிக்கும் மையங்கள் முளைத்துக் கொண்டிருப்பதையும், ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு, ஆக்ஸிஜன் சிலிண்டரையும் சேர்த்து சுமக்கும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே, பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மரங்களின் அவசியத்தை மிக வித்தியாசமானக் கோணத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் அசோக்குமார்.

'கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்பட்டுள்ள இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன், நாம் உயிர் வாழ அவசியமான ஒன்றுதான் என்றாலும், எவ்வளவு நேரம் இந்த மாஸ்க்-ஐ அணிந்து கொண்டேயிருப்பது என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதன் மூலம் மரங்களின் அவசியத்தை எளிதாகப் புரிய வைத்துவிட முடிகிறது' என்கிறார் அசோக்குமார்.

உலகின் காற்று மாசடைந்த 20 நகரங்களில் 14 நகரங்கள், இந்தியாவில் இருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய விசயம். தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததை வெறும் செய்தியாகக் கடந்துவிடும் நாம், எதிர்காலத் தலைமுறைக்கு கொடிய அச்சம் தரும் சூழலைப் பரிசாக அளிக்கவிருக்கிறோம் என்பது எத்தனை உண்மை.

குழந்தைகளிடம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுதான் எதிர்காலத்தில் நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, இந்த எளிய செயல் விளக்கத்தின் மூலமாக சுற்றுச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லும் அசோக்குமார், மிகுந்த தன்னார்வத்துடன் இச்சேவையைப் புரிந்து வருகிறார்.

பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் நமக்கு, தலைநகர் டெல்லியின் நிலை பெரும் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மரங்களின் அவசியம் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லித்தருவது எத்தனை அவசியமோ அதைவிட, சூழல் கேடால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்த்துவது அதைவிட அவசியம். அந்த வகையில் தன்னார்வலர் அசோக்குமாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பின்பற்ற வேண்டியதும்கூட.

இதையும் படிங்க:'சிங்கிளாக வலம்வரும் ஒற்றைக்கொம்பனை அதன் கூட்டத்தோடு சேர்த்துவிடுங்க'

ABOUT THE AUTHOR

...view details