மதுரை: கமல்ஹாசன் முதலில் மாநிலம் தழுவிய தலைவராக உருவாகட்டும் பிறகு விருப்பமான தொகுதியில் போட்டியிடட்டும் என மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள சாக்கிலிப்பட்டி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அப்போது அவர் கூறியதாவது;
இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிப்பது குறித்து அதிமுக அரசு முடிவெடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் மதுரையில் பரப்புரையை தொடங்கியதால் தனிப்பட்ட முறையில் இரண்டாம் தலைநகராக அறிவிப்பதாக அரசியலுக்காக பேசிவருகிறார்.
இப்போதைக்கு மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற அவசியம் இல்லை. எதிர்காலத்தில் அதிமுக அரசு அறிவிக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து சிலர் தவறான பரப்புரையை செய்து வருகின்றனர்.
எம்ஜிஆரை பின்பற்றும் ரஜினி, கமல் இருவரும் எம்ஜிஆர் ஆட்சியின் மாதிரியை வேண்டுமானால் கொடுக்க முடியும், ஆனால் தற்போதையை அதிமுக அரசு எம்ஜிஆர் ஆட்சியை நடத்தி வருகிறது.
மதுரையில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வலுவான அடித்தளம் தேவை, முதலில் மாநிலம் தழுவிய தலைவராக உருவாகட்டும் பிறகு விருப்பமான தொகுதியை கேட்கலாம்.
குறிப்பாக தலைவராக உருவாக தியாகங்கள் செய்திருக்க வேண்டும், கமல்ஹாசனுக்கும், ரஜினிக்கு தியாக பட்டியலில் ஜீரோ(ZERO) மதிப்பெண் மட்டுமே, அதிமுகவை பொறுத்த வரையில் தியாக பட்டியலில் பாஸ் மார்க் எடுத்துள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டார் - மாமனார் ரவிச்சந்திரன்