மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆகவே நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
இதுமட்டுமின்றி வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட ஐந்து 5 மாவட்டங்களையும் இணைத்து நீதிமன்றம் விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவை துறையின் உதவி இயக்குனர் திரவியசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “மதுரை வைகை ஆற்றில் எல்லைகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய மூல ஆவணங்கள் கிடைக்கவில்லை . மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது” என்று கூறினர்.
மேலும், “வைகை ஆற்றின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கபட்டு வருகிறது” என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, நாளை (சனிக்கிழமை) காலை மதுரை வைகையாற்றில் விரகனூர் ரிங்ரோடு வைகை ஆற்று பகுதியில் இருந்து பிடிஆர் பாலம் வரை உள்ள வைகை ஆற்றில் ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டுள்ளதா..? அல்லது வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என கண்டறிய வேண்டும்.
வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு மேலும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் இந்த ஆய்வின் போது அரசு வழக்கறிஞர், மனுதாரர் வழக்கறிஞர்கள் , மற்றும் மதுரை வருவாய்த் துறை , பொதுப்பணித்துறை, மதுரை மாநகராட்சி அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.ஆய்வு குறித்த அறிக்கையை வருகிற 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கு வருகிற 3ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையும் படிங்க: ஓ. ராஜா நியமனம் ரத்து: உயர் நீதிமன்றக் கிளை அதிரடி!