சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘இந்திய மருத்துவக் கவுன்சில், பல்மருத்துவக் கவுன்சில் விதி முறைகளில் நீட் தேர்வைத் திணிப்பதில் திருத்தம் செய்தபோது, அதனை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களித்திருக்க முடியும். ஆனால் அதை எதிர்த்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்தனர்.
அடுத்து நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை நடத்துவதை சட்டரீதியாக வலுப்படுத்தும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியபோதும் அதை எதிர்த்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்குப் பெறுவதற்காக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றிருக்கலாம். ஆனால் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை மத்திய அரசுடன் இணைந்து நாடகமாடி தமிழ்நாடு அரசு மக்களிடம் மறைத்துவிட்டது. இது முழுக்க முழுக்க அதிமுகவின் சந்தர்ப்பவாத அரசியல்.
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் மூலம் ஒழித்துக் கட்டப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அதிமுக ரிட் மனுவை தாக்கல் செய்வது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். இம் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் நீட்டுக்கு ஆதரவான உத்தரவை வழங்கினால் அதன் மூலம் நீதிமன்றத்தை காரணம் காட்டி தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ளும் முயற்சியைதான் இந்த அதிமுக அரசு செய்துவருகிறது. எனவே இதுபோன்று தமிழ்நாடு அரசு மக்களை ஏமாற்றும் முயற்சிகளை கைவிட்டு மத்திய அரசை வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் செய்து நீட் தேர்விலிருந்து விலக்கைப் பெற வேண்டும். மேலும் நெக்ஸ்ட் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - தரகரின் பிணை மனு தள்ளுபடி