மதுரை சர்வேயர் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறியபோது, "இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் குறித்து நேற்று முன்தினம் (ஜூன் 24) நாடாளுமன்ற நிலைக்குழு விவாதத்தில் விவாதிக்கப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி எது?
இந்தக் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் விடுபட்டுள்ளது. இது குறித்து சரியான புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. குறிப்பாக 'ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், எந்த மாநிலத்திலும் இது குறித்த புள்ளி விவரங்களைப் பெறவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், மாணவர்களுடைய உலகம் முழுவதுமாக மாறிப்போய் உள்ளது.
இது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான கருவுற்ற தாய்மார்களுக்குத் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு என்ன மாதிரியான ஊசி செலுத்துவது என்று ஒன்றிய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.