மதுரை:மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சி தொடர்புடைய நூல்களை வைப்பது, நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரிய மனு விசாரணையில், தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களைக் கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்ய இயலாத அளவில் இருக்கும் என நீதிபதிகள் வேதனைத்தெரிவித்துள்ளனர்.
மேலூர் எட்டிமங்கலத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்குத்தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் 26,035 புத்தகங்கள்: இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, "தமிழ்ச்சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை, உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நூல்கள் பெறப்பட்டுள்ளன.